சனி, 1 ஆகஸ்ட், 2020

Factor of Production -உற்பத்திக்காரணிகள் முழுமையான பாடப்பரப்பு - GCE A/L -க.பொ.த உயர்தரம் பொருளியல்

உற்பத்திக்காரணிகள்

முழுமையான பாடப்பரப்பும் தரப்பட்டுள்ளது - By Darshan B.A Econ Spl,HR,IL

கற்பதற்கு மாணவர்களுக்கு மட்டும்-வியாபாரிகள் எந்த வியாபார நோக்கத்துக்காகவும் இதனை அப்படியே பதிந்து ஒட்டி பணம் பார்க்க எத்தணிக்க கூடாது!!!---

உற்பத்திக் காரணிகள்:

பொருட்கள் சேவைகளின் உற்பத்தியை மேற்கொள்ளுவதற்காக அதில் ஈடுபடுத்தப்படுகின்ற நிலம், மூலதனம், உழைப்பு, முயற்சி ஆகிய சாதனங்களே உற்பத்திக் காரணிகள் அல்லது ஆக்க சாதனங்கள் எனப்படும்.

வழிவந்த கேள்வி

இவ்வுற்பத்திக் காரணிகளுக்கு ஏற்படுகின்ற கேள்வி வழிவந்த கேள் வியாகும். வழிவந்த கேள்வி என்பது ஒரு பொருளின் கேள்வியினூடாக இன்னொரு பொருளுக்கு கேள்வி ஏற்படுவதனைக் குறிக்கும், உற்பத்திக் காரணிகளுக்கு ஏற்படும் கேள்வி அவ்வுற்பத்திக் காரணிகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யக்கூடிய முடிவுப் பொருட்கள் சேவைகளிலேயே தங்கியுள்ளது. அதாவது முடிவுப் பொருட்கள் சேவைகளின் கேள்வியினூடாகவே அம் முடிவுப் பொருட்களின் உற்பத்திக்கு தேவையான உற்பத்திக் காரணிகளி கேள்வி நிர்ணயிக்கப்படுகின்றது. பொருட் சந்தையில் குறிப்பிட்ட ஒரு பொருளுக்கு அதிகளவு கேள்வி காணப்பட்டால் அப்பொருளை உற்பத்தி செய்வதற்குரிய உற்பத்திக் காரணிகளுக்கு காரணிச்சந்தையில் அதிகளவு கேள்வி ஏற்படும் எனவே உற்பத்திக் காரணிகளுக்கான கேள்வி அதனது உற்பத்திதிறன், முடிவுப் பொருட்கள் சேவைகள் என்பவற்றை உற்பத்தி செய்யும் ஆற்றல் காரணமாகவே ஏற்படுவதனால் உற்பத்திக் காரணிச் சேவைகளுக்கான கேள்வி வழிவந்த கேள்வியாகும். -ம்:- வயல் நிலத்துக்கு கேள்வி அரிசியினூடாக ஏற்படுவது.

உற்பத்தி காரணியாக நிலம்

பொருட்கள் சேவைகளின் உற்பத்தியில் ஈடுபடுகின்ற சாதனங்களுள் எவை இயற்கையாக கிடைக்கின்றதோ அவை நிலம் என்ற உற்பத்திக் காரணிக்குள் உள்ளடக்கப்படும். எனவே பொருட்கள் சேவைகளின் உற்பத்திக்கு காரணமாக இருக்கும். இயற்கையின் நன்கொடைகள் அனைத்தும் எல்லா இயற்கை மூலவளங்களும் நிலம் என்ற உற்பத்திக்காரணிக்குள் அடக்கப்படுவதால் இது ஒரு இயற்கைச் சாதனமாகும். எனவே பொதுவாக பின்வருவனவற்றை நிலத்தினுள் அடக்கலாம்.

01. நாம் வாழுகின்ற புவியின் மேற்பரப்பு.

02. இப்புவியை மூடிஇருக்கின்ற புவியின் மேற்பரப்பு (ஆறு,கடல்)

03. மழை, காற்று, சூரிய ஒளி.

04. புவியின் உட்பகுதியில் காணப்படுகின்ற வாயுக்கள்.

இந்நிலம் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் போது கிடைக்கும் சன்மானம் வாடகை ஆகும்.

 

நிலத்தின் சிறப்பியல்புகள்

01. நிலத்தின் நிரம்பல் மாறாது.

02. நிலம் இயற்கையின் நன்கொடை.

 03. நிலத்தை உற்பத்தி பாக்க முடியாமையால் உற்பத்தி செலவு இல்லை .

04. நிலம் அசையும் தன்மையற்றது.

05. நிலத்தின் வளம் இடத்துக்கு இடம் வேறுபட்டது.

06. நிலம் குறைந்து செல்லும் எல்லை விளைவு விதிக்குட்பட்டது

 இயற்கை சாதனமான நிலத்தை மனிதனால் உருவாக்க முடியாததால் (உற்பத்தி செலவு இன்மை) நிலத்தின் மொத்த நிரம்பல் எப்போதும் நிலையானதாகவே இருக்கும். ஆனால் புதிய கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்படுகின்ற போது மனிதன் அறிந்து வைத்திருந்த இயற்கை மூலவளங்களை அறிய முற்படும் போது மனிதன் அறிந்துள்ள நிலத்தின் நிரம்பலில் (விளைவு) மாற்றத்தை ஏற்படுத்த முடியுமே தவிர நிலத்தின் மொத்த நிரம்பல் மாறாது.

 

நிலத்தின் செழிப்பு தன்மையானது 3 பகுதிகளுள்

அடக்கப்படுகின்றது.

 01.மாறா எல்லை விளைவு விதி - எல்லை விளைவு:-

உற்பத்தி செலவும் அதன்மூலம் கிடைக்கின்ற பயனும் ஒரேயளவாகக் காணப்படும்.

02. அதிகரித்து செல்லும் எல்லை விளைவு விதி -எல்லைக்குகூடியவிளைவு:-

 உற்பத்தி செலவை விட அதன் மூலம் கிடைக்கின்ற பயன் அதிகமாக காணப்படும்

03. குறைந்து செல்லும் எல்லை விளைவு விதி  காணப்படும்-எல்லைக்குக்கீழ் விளைவு:-

உற்பத்திச் செலவைவிட அதன் மூலம் கிடைக்கின்ற பயன் குறைந்து காணப்படும்.

 

குறைந்து செல்லும் எல்லை விளைவு விதி:

உற்பத்தியில் பயன்படுத்தப்படும் காரணிகளுள் நிலம் என்பதனை நிலையான காரணியாகக் கொண்டு அதனோடு இணைத்து ஏனைய ஆக்கக் காரணிகளை குறிப்பாக ஊழியத்தை மாறும் காரணியாக பயன் படுத்தி உற்பத்தியினை அதிகரித்துச் செல்கின்ற போது கிடைக்கப்பெறும் விளைவு ஒருகுறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் வீழ்ச்சியடைந்து செல்லும் என்பதனையே குறைந்து செல்லும் விளைவு விதி என்ப்படுகிறது. எனவே நிலம் எனும் உற்பத்திக் காரணி குறைந்து செல்லும் விளைவு விதிக்குட்பட்டுள்ளது. இக்குறைந்து செல்லும் விளைவு விதியை விளக்குவதற்கு 'அல்பிரட்மார்ஷல்' என்பவர் பின்வரும் இரண்டு எடுகோள்களை முன்வைத்தார்.

01. உற்பத்திச் செய்கையில் எந்தவொரு தொழில்நுட்ப முயற்சிகளும் பயன்படுத்தப்படவில்லை

02. பயன்படுத்தப்படும் நிலமானது தொடர்ச்சியாக உற்பத்திச் செய்கைக்கு உட்பட்டு வந்த நிலமாகும்.

நிலத்தில் இருந்து பெறப்படும் விளைவானது அதில் ஈடுபடுத்தப் படும் புதிய நிலம், தொழில் நுட்பங்களையும் சார்ந்தது. உற்பத்திக்கு புதிய நிலம் கொண்டு வரப்பட்டும் தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்தும் காணப்படும் நிலையில் விளைவானது குறைந்து செல்லாது.

எனவே புதிய நிலங்கள், புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படாத நிலையில் தான் விளைவானது குறைந்து செல்லும் நிலையில் இருக்கும்.

இதனை பின்வரும் பட்டியல் வரைபடம் மூலம் தெளிவு படுத்தலாம்.

அதாவது நிலம் என்னும் உற்பத்திக்காரணியோடு ஏனைய ஏனைய காரணிகளினை இணைத்து உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும்போது,நிலத்தினால் கிடைக்கின்ற உற்பத்தியனது தொடர்ச்சியாக குறைவடைந்து செல்லும் என்பதே குறைந்து செல்லும் எல்லை விளைவு விதியாகும்.

 

மூலதனம்

மூலதனம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு உற்பத்திக் காரணியாகும். பொருட்கள் சேவைகளின் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் சாதனங்களுள் எவை மனிதனால் உருவாக்கப்பட்டதோ அவற்றை மூலதனம் என வரையறுக்கலாம்.

பொருள் உற்பத்தியின் ஆரம்ப கட்டத்தில் இருந்து அதாவது மூலப் பொருளில் இருந்து நுகர்வுக் கட்டத்தை அடையும் வரையுள்ள உற்பத்தி நடத்தையில் ஈடுபடுத்தப்பட்ட, மனிதனால் உருவாக்கப்பட்ட இயந்திர சாதனங்கள், கருவிகள், கட்டிடங்கள், தளபாடங்கள், போன்றவையே மூலதனமாக கருதப்படும்.

இதற்குரிய சன்மானமாக வட்டி பெறப்படும்.

 

வட்டி

வட்டி எனும் போது இது ஒரு ஒப்பந்தக் கொடுப்பனவாகும். இது முதல் நிதிகளின் உபயோகத்திற்காக கொடுக்கப்படுவதால் முதல் நிதிகளின் விலையாகும். நிச்சயமாகக் கிடைக்கும். இவ்வட்டி சந்தை சக்திகளினால் அதாவது முதலுக்கான கேள்வி, நிரம்பலினால் தீர்மானிக்கப்படுகிறது.

 

பணவட்டி வீதம்

பணவட்டி வீதம் எனும் போது பணவடிவில் பெறப்படுகின்ற கொடுப்பனவுகள் அனைத்தையும் குறிக்கும். அதாவது முதலினது உண்மைப் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றத்தை பண வட்டி வீதம் காட்டுவதாக இருக்கும்.

மெய் வட்டிவீதம்

மெய் வட்டிவீதம் எனும் போது பணத்தினது கொள்வனவு சக்தியின் அடிப்படையிலான வட்டி வீதமாகும் (அதாவது) பணவட்டி வீதத்தில் இருந்து பணவீக்க வீதத்தை கழிக்க வருவதாகும். அதாவது முதலினது மெய் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றத்தை மெய் வட்டி வீதம் காட்டும்.

 * பணவட்டி வீதம் - பணவீக்கவீதம் = மெய் வட்டி வீதம்

 

பணமூலதனம்

வருமானங்களைப் பெறும் நோக்குடன் நிதிச் சொத்துக்களின் வடிவில் வைத்திருக்கப்படும் மூலதனமே பணமூலதனமாகும். வட்டி, இலாபங்கள் போன்ற வருமானங்களை பெறும் நோக்குடன் பங்குகள். ஆவணங்கள் பிணைகள் ,உண்டியல் போன்றவற்றில் மேற் கொள்ளப்பட்ட முதலீடுகளே பண மூலதனமாகும்.

மெய் மூலதனம்

பொருட்கள சேவைகளின் உற்பத்திக்குப் பயன்படுத்துவற்காக மெய் சொத்துகளின் வடிவில் வைத்திருக்கும் மூலதனமே மெய்மூலதனமாகும். அதாவது உற்பத்திக்கு பயன்படுத்துவதற்காக ஒரு நாட்டில் வைத்திருக்கப்படும் இயந்திரங்கள் கருவிகள், கட்டிடங்கள்,மூலப்பொருள், முடிவுப் பொருள் இருப்புக்கள் என்பவையே மெய் மூலதனமாகும்.

மூலதன இருப்பு

ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் உற்பத்திக்கு பயன்படுத்து வதற்காக ஒரு நாட்டில் காணப்படும் மனிதனால் ஆக்கப்பட்ட இயந்திரங்கள், உபகாணங்கள், கட்டிடங்கள், போன்றவையே மூலதன இருப்பாகும்.

மூதலீடு

மூலதன இருப்பை அதிகரிக்கின்ற ஒரு பாய்ச்சலாக முதலீடு அமைகிறது. அதாவது முதற் பொருட்கள் உருவாக்கப்படுகின்ற ஒரு முறையாகும். அதாவது மூலதனத்துடன் சேர்க்கப்படுவது முதலீடு ஆகும்

 

 

 

மொத்த முதலீடு

ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் மூலதன இருப்பில் ஏற்படுகின்ற அதிகரிப்பே மொத்த முதலீடாகும். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் உற்பத்திக்கு பயன்படுத்துவதற்காக மனிதனால் புதிதாக உருவாக்கப் பட்ட இயந்திரங்கள், கட்டிடங்கள், கருவிகள், போன்ற மூலதன பொருட்களே மொத்த முதலீடாகும், எனவே ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டில் ஏற்பட்ட மூலதன ஆக்கமே மொத்த முதலீடாகும்

 

மாற்று முதலீடு

இம் மொத்த முதலீட்டில் ஒரு பகுதியானது ஏற்கனவேயுள்ள மூலதன இருப்பினை ஒரு நாடு உற்பத்திக்குப் பயன்படுத்திய போது அவ்விருப்பில் ஏற்பட்ட தேய்வினை ஈடுசெய்வதற்குப் பயன்படுத்துகின்றது. இவ்வாறு மூலதன தேய்வை ஈடுசெய்வதற்குப் பயன்படுத்திய முதலிடே மாற்று முதலீடாகும்.

 

தேறிய முதலீடு

எனவே மொத்த முதலீட்டில் பெறுமான தேய்விற்கு பயன்படுத்திய மாற்று முதலீட்டை கழித்து பெறப்படும் புதிய முதலீடே தேறிய முதலீடாகும். எனவே மொத்த முதலீட்டில் மாற்று முதலீடு புதிய முதலீடு என்ற இரு விடயம் காணப்படுகின்றது.

மொத்த முதலீடு-மாற்று முதலீடு= தேறிய முதலீடு

 

 மூலதனவாக்கம்

ஒரு நாட்டின் மூலதன இருப்பிற்கு ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் சேர்க்கப்படுகின்ற மூலதனமே மூலதன ஆக்கமாகும். அதாவது இயந்திரங்கள், கட்டிடங்கள், உபகரணங்கள் போன்ற மூலதன இருப்பிற்கு முதலீடுகள் மூலம், கூட்டப்படுவதே மூலதன ஆக்கமாகும். ஒரு நாட்டின் மூலதன இருப்பை அதிகரிக்கும் நோக்குடன் வருடாவருடம் புதிதாக இயந்திரங்கள், கட்டிடங்கள், உபகரணங்கள் உருவாக்கப்பட்டு மூலதன இருப்பில் சேர்க்கப்படும். இதுவே மூலதன ஆக்கமாகும். சுருக்கமாக மெய்முதல் இருப்பின் அளவு அதிகரிக்கப்படுதலை குறிக்கும். (இதனை பின்வரும் சமன்பாட்டின் மூலம் காட்டலாம் )

k=kt-kt-1

மூலதன ஆக்கம் = புதிய/தற்போதைய மூலதனம்-அதற்கு முந்தய ஆண்டின் மூலதனம்

இம்மூலதனவாக்கத்தின் பிரிவுகளாக.

01. மொத்த உள்நாட்டு நிலையான மூலதன ஆக்கம்

02. இருப்புகளின் மாற்றம் - (இவை தேசிய வருமான பகுதியில் விளக்கப் பட்டுள்ளது)

 

மூலதன வாக்கத்தின் மூலாதாரங்கள்:

1. உள்நாட்டின் உயர்ந்த சேமிப்பு, முதலீடுகள்.

() தனியார் சேமிப்பு

() பொது சேமிப்பு

02. வெளிநாட்டு சேமிப்புகள்,

() வெளிநாட்டு நிதி

 () வெளிநாட்டு நன்கொடைகள்.

() சர்வதேச நிதி நிறுவனங்களின் நிதிகள்.

() வெளிநாட்டு தனியார் முதலீடு.

 

 

 

சேமிப்பு

சேமிப்பு எனும் போது வருமானத்தில் நுகர்வில் செலவிட்டது போக எஞ்சி இருக்கின்ற பகுதியாகும். எனவே இதுவே முதலீட்டை நிதிப்படுத்துகின்ற ஒரு மூலமாகும்.

 

அரசாங்க சேமிப்பு

இங்கு அரசாங்க சேமிப்பு என்னும் போது அரசாங்க வரவு செலவுத்திட்டத்தின் நடைமுறைக்கணக்கு மிகையினைக் குறிக்கும். அதாவது அரச இறையிலும் பார்க்க நடைமுறை செலவு குறைவானதாக இருக்கும். (அரசிறை - நடைமுறைச் செலவு)

 

தனியார் சேமிப்பு/வியாபார சேமிப்பு

வியாபார சேமிப்பு என்னும் போது நிறுவனங்களில் காணப்படுகின்ற பங்கிடப்படாத இலாபங்கள் மீள் முதலீடு செய்யப்பட்ட இலாபங்கள் ஒதுக்கங்கள் என்பனற்றை குறிக்கின்றது.

 

தொழிலின் மூலதன ஆக்கத்தின் மூலகங்கள்

01. பங்கு மூலதனம்.

02. கடன்கள்.

03. தொழிலின் ஒதுக்குகள்.

 04. பங்கிடப்படாத இலாபங்கள்.

 

மூலதன வாக்கத்தின் முக்கியத்துவம்

மூலதன வாக்கம் ஏற்படுவதன் மூலம் ஒரு நாட்டின் மூலதன இருப்பு அதிகரிக்கின்றது. அதாவது மூலதனம் என்ற உற்பத்திக் காரணியின் அளவு அதிகரிக்கின்றது. இதனால் ஒரு நாட்டின் உற்பத்தி ஆற்றல் அதிகரிக்கின்றது அதாவது அந்நாடு முன்னதிலும் பார்க்க பொருட்கள் சேவைகளை உற்பத்தி செய்யக் கூடிய வல்லமையைப் பெறுகின்றது.

 

மனித மூலதனம்

மனிதர்களிடம் காணப்படுகின்ற அவர்களுக்கு சொந்தமாகவுள்ள உற்பத்திதிறமையான வைத்தியத்திறமை, தொழில் நுட்பத்திறமை, பொறியியல் திறமை என்பனவே மனித மூலதனமாகும்.

இதன் அளவை நிர்ணயிக்கும் காரணிகளாக

01. கல்வி அறிவியல்

02. தொழில்நுட்ப அறிவு

03. அறிவுத்திரட்டல்

04. சுகாதார போசாக்கு நிலைமைகள் போன்றவற்றின் வளர்ச்சி,

எனவே இவற்றில் மேற்கொள்ளப்படும் உயர்ந்த முதலீடுகள் மூலம் மனித மூலதன அபிவிருத்தியை ஏற்படுத்தலாம்

 

 

 

உழைப்பு / ஊழியம்

 பொருட்கள் சேவைகள் உற்பத்திக்கு மனிதனால் வழங்கப்படும் உடல் ரீதியானதும் உள ரீதியானதுமான காரணிச்சேவையே ஊழியமாகும். எனவே ஒரு ஒழுங்குபடுத்தப்படக் கூடிய மனித சாதனமான இது இலவசமாக உற்பத்திக்கு வழங்கப்படும், சந்தர்ப்பத்தில் இதனை ஒரு உற்பத்திக் காரணியாகக் கொள்ள முடியாது. எனவே பிரதிபயனை எதிர்பார்த்து உற்பத்திக்கு வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரமே இது ஊழியமாக கருதப்படும். இவ் ஊழியத்திற்கான சன்மானமாக கூலி பெறப்படுகின்றது.

ஊழியத்தின் பண்புகள்

1.   உயிருள்ள உற்பத்திக் காரணியாகும்.

2.       அசையும் தன்மையுடையது.

3.       ஓரினத் தன்மையற்றது.

4.       கல்வி, பயிற்சி, அனுபவம் போன்றவற்றில் உழைப்பின் விளைதிறனை உயர்த்தலாம்.

5.       உழைப்பை உடமையாளரிடம் இருந்து பிரிக்க முடியாது.

6.       உழைப்புக்கான காரணிக்கொடுப்பனவு சம்பளம் / கூலி ஆகும்.

(ம்) : ஒரு மணிநேர சட்ட ஆலோசனை, முகாமையாளர் சேவை.

 

கூலியின் வகைகள்

01. பணக் கூலி

பணக் கூலி என்னும் போது ஊழியமானது உற்பத்திக்குப் பயன் படுத்தப்படும் போது அதற்குப் பண அலகின் அடிப்படையில் வழங்கப்படுவதே கூலியாகும் ஊழியத்தின் பொருளாதார நிலையினை பணக்கூலியின் அளவு, அதனது வாழ்க்கை தரத்தையும் அடிப்படையாகக் கொண்டே மதிப்பிடு செய்யமுடியும்.

02. மெய்க் கூலி

மெய்கூலி என்னும்போது பணக்கூலியைக் கொண்டு கொள்வனவு செய்யக் கூடிய பொருட்கள் சேவைகளின் அளவினைக் குறிக்கும், அதாவது ஊழியன் உண்மையாக அடைகின்ற வாழ்க்கைத் தரத்தைக் குறிக்கும் பணக் கூலியை நுகர்வோன் விலைச் சுட்டியினால் சுருக்குவதன் மூலம் இது கணிப்பிடப்படுகிறது.

 

மெய்க் கூலியை நிர்ணயிக்கும் காரணிகள்

. 01. பணக் கூலி

 02. பொது விலை மட்டம்.

03. ஊழியம் பெறும் உப வருமானங்கள்.

04. வேலை நேர நிபந்தனைகள்.

05. மேலதிகமாக வழங்கப்படும் பணக்கூலிகள்.

06. ஒழுங்கான வேலை வாய்ப்பு. 07. பதவி உயர்வுகள்.

 

கூலி வேறுபடுவதற்கான காரணிகள்

01. சமூகத்தில் சமசந்தர்ப்பமின்மை ,

02. சமதிறமையின்மை . 03. தொழிலின் தன்மை.

04. நிறை போட்டியின்மை,

05. சம அனுபவமின்மை .

 

வேலை செய்யும் வயதிலான சனத் தொகை:

ஒரு நாட்டின் மொத்த சனத் தொகையில் 15-65 வயதிற் கிடைப்பட்டோரின் எண்ணிக்கையே வேலை செய்யும் வயதிலான சனத் தொகையாகும்.

தங்கியிருக்கும் சனத் தொகை

ஒரு நாட்டின் மொத்த சனத்தொகையில் வேலை செய்யும் வயதான சனத்தொகையைக் கழிக்க வருவதே அதாவது மொத்த சனத்தொகையில் 15 வயதுக்கு உட்பட்டோரினதும் 65 வயதுக்கு மேற்பட்டோரினதும் எண்ணிக் கையே தங்கியிருக்கும் சனத் தொகையாகும்.

 

தங்கியிருப்போர் சனத்தொகை வீதம்

இத்தங்கியிருப்போர் சனத்தொகையை வேலை செய்யும் வயதிலான சனத்தொகையின் வீதமாக அதாவது 15 வயதிற்குட்பட்டோர், 65 வயதிற்கு மேற்பட்டோரினதும் மொத்த சனத் தொகையில் 15-65 வயதிற்கு இடைப்பட்டோரின் வீதமாக கூறுதலே தங்கியிருப்போர் சனத்தொகை வீதமாகும். (15 வயதிற்குட்பட்டோர் - 65 வயதிற்கு மேற்பட்டோர் 15-65 வயதிற்கு இடைப்பட்டோர்

 

தொழிற்படை அல்லது ஊழியப்படை

வேலை செய்யக் கூடிய விருப்பமும் ஆற்றலுமுடையோரின் எண்ணிக்கையே தொழிற்படையாகும். அதாவது ஒரு நாட்டின் வேலைசெய்யும் வயதிலான சனத் தொகையில் இருந்து அதற்குள் அடங்கியிருக்கும் கல் விகற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள். குடும்பத் தலைவர்களாக விளங்கும் பெண்கள் வேலை செய்ய விருப்பமற்றிருக்கும் ஆண்கள் உடல் உளரீதியான குறைபாடுடையோர் போன்றோரின் மொத்த எண்ணிக்கையைக் கழித்து மீதியாக உள்ள வேலை செய்யும் வயதிலான சனத்தொகையே தொழிற் படையாகும். எனவே தொழிற்படை என்னும் போது.

01. வேலை செய்வோர்

02. தொழில் தேடும் தொழிலற்றோர் (விருப்பிருந்தும் தொழில் இல்லா திருப்போர்) போன்றோரையும் உள்ளடக்கும்.

தொழிற்படை அல்லது ஊழியப்படை = வேலை செய்வோர் + தொழில் தேடும் தொழிலற்றோர்

 

தொழில் செய்வோர் பின்வரும் 4 வகையாக அடக்கப்படுவர்:

01. சம்பளம் பெறும் தொழில் செய்வோர்.

02.தொழில் கொள்வோர்.

03. சுய தொழில் செய்வோர்.

04. சம்பள மற்ற குடும்ப தொழிலாளர்.

 

வேலை தேடுவோர்/தொழில் தேடும் தொழிலற்றோர்

தொழில் செய்யும் வயதிப் பிரிவினரிலிருந்து தொழிலில் ஈடுபட விருப்பமும் ஆற்றலும் உள்ளோர் தொழில் தேடிக் கொண்டிருப்போர் அதாவது பின்வரும் நிலையில் உள்ளேளாரைக் குறிக்கும்.

 01. வேலையற்றிருப்பவர்கள்

02. வேலை செய்வதற்கு தயாராக இருப்போர்.

03. வேலை தேடுவோர்.

 

தொழிலற்றோரின் வகைகள்

01. முழுமையாக தொழிலற்றோர்.

02. உள்ளார்ந்த தொழிலற்றோர்.

ஒரு நாட்டின் ஊழியப்படையின் பருமன், சேர்க்கை, வளர்ச்சிப் போக்கு என்பனவற்றைத் தீர்மானிக்கும் காரணிகள்

01. குடித்தொகை அமைப்பு

குடித்தொகையின் பருமன், வயது, பால் அமைப்பு வீதம். மரண வீதம். இடப்பெயர்வு திருமண நிலை பெண்களின் தாய்மை நிலைஜனம் பண்புகள் என்பன வழியப்படையின் போக்கை தீர்மானிக்கும் காரணிகள்.

02. சமூகப் பொருளாதாரக் காரணிகள்

கல்வி நிலை கைத் தொழிலாற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவுமாற்றங்கள், சமூகப் பாதுகாப்பு, சேவைகள் சமயம் வேலையின்மையின் அளவு, ஊழியத்திற்கான கேள்வி.

03. ஊழியப்படை விகிதம்.

 ஊழியப்படையின் பருமட்டான பங்கு கொள்ளல் விகிதமே இதுவாகும் மொத்த வாழியப்படையின் எண்ணிக்கையை மொத்த சனத்தொகையின் விகிதமாக தெரிவிக்கப்படுவதே இதுவாகும்.

 

ஊழிய நிரம்பல்

ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஒரு நாட்டின் குடித்தொகை நிரம்பல் செய்யத்தயாராக இருக்கின்ற மனித ஊழியத்தினது மொத்த அளவே வாழிய நிரம்பலாகும்.

ஊழிய நிரம்பலை தீர்மானிக்கும் காரணிகள்

01. குடித்தொகையின் பருமன்.

02. சனத்தொகையின் வயதமைப்பு.

 03. ஊழியச் சந்தையில் தொழில் படையில் சேருகின்ற குடித்தொகையின் வீதாசாரம்,

04. ஒவ்வொரு தொழிலாளியும் குறிப்பிட்ட வருடத்தில் வேலை செய்ய விரும்பும் நாட்களின் எண்ணிக்கை.

05. வேலை நோக்கத்தை பாதிக்கும் காரணிகள்.

 

அண்மைக்காலங்களில் ஊழியப்படை வீழ்ச்சிக்கான காரணிகள்:

01. மத்திய கிழக்கு வேலைவாய்ப்பும் இந்திய வம்சாவழியினர் தாயகம் திரும்புதலும்.

02. மொத்த சனத்தொகையில் 14-55 வயதுப்பிரிவினரின் விகிதம் வீழ்ச்சியடைந்ததுடன் குடி பெயர்ந்தவர்களின் அதிகமானோர் 19-55 வயதின் இடைப்பட்டோரும் ஆகும். மேலும் இவ் வயதின் 50% மாணவர்களாதலால் ஊழியப்படையில் சேரவில்லை.

03. சனத்தொகையின் ஆற்றல் மிக்க வயதுச் சராசரி வீழ்ச்சியால் ஊழியச்சந்தைக்கு                பிரவேசிப்பவர்கள் விகிதம் வீழ்ந்தமை.

04. உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் யுத்தம் காரணமாக புலப்பெயர்வு அதிகரிப்பு.

துறை ரீதியான ஊழியப்படையினர்

01. கிராமம்

02. நகரம்.

03.பெருந்தோட்டம்

எனபிரிக்கப்பட்டனர். இவர்களின் பரம்பல் தொடர்பாக உள்நாட்டு உற்பத்தி ,மற்றும் பேரின பொருளாதாரம் என்பன பற்றி பார்க்கும் போது பார்க்கலாம்.

ஏனைய உற்பத்திக் காரணிகளிலிருந்து ஊழியத்தை வேறுபடுத்தும் காரணிகள்:

01. ஊழியத்தை தொழிலாளர்களிடமிருந்து பிரிக்க முடியாமை.

02. ஊழியம் பேரம் பேசும் சக்தியைக் கொண்டது.

03. ஊழியத்தின் கேள்வி மாற்றத்துக்கேற்ப அதன் நிரம்பலை ஒழுங்கு படுத்த முடியாது.

04. ஊழியம் அழியக் கூடியது அது நிலைத்திருப்பதில்லை .

05. ஊழியம் விற்கப்படும் இடத்தில் தொழிலாளி கட்டாயம் சமூகமளிக்க வேண்டும்.

 06 . உயிருள்ள உற்பத்திக் காரணியாகும்.

  0. 7 ,அசையும் தன்மையுடையது.

  08 .ஓரினத் தன்மையற்றது.

  09 .கல்வி, பயிற்சி, அனுபவம் போன்றவற்றில் உழைப்பின் விளைதிறனை உயர்த்தலாம்.

   10 .உழைப்புக்கான காரணிக்கொடுப்பனவு சம்பளம் / கூலி ஆகும்.

(ம்) : ஒரு மணிநேர சட்ட ஆலோசனை, முகாமையாளர் சேவை.

 

ஊழியத்தின் வினைத்திறனை நிர்ணயிக்கும் காரணிகள்

01. நியாயமான வேதன கொடுப்பனவுகள்.

02. ஊழியம் பெறும் உப வருமானங்கள்.

 03. கல்வி, தொழில் நுட்பப் பயிற்சி.

 04. ஊழியத்தின் தனிப் பண்புகள்.

05. கால நிலையும் தன்மைகளும்.

 06. வேலைத்தளம் நிலைமை.

 

முயற்சி/முயற்சியாண்மை

நிலம், முதல், உழைப்பு ஆகிய உற்பத்திக்காரணிகளை இணைத்து ஒழுங்குபடுத்தி உற்பத்தியை மேற்கொள்வதுடன் உற்பத்தி பற்றிய தீர்மானங்களை அதாவது என்னென்ன பொருளை எவ்வாறு யாருக்காக உற்பத்தி செய்தல் என்ற முடிவை மேற்கொள் வது முயற்சியாண்மையாகும், மட்டுமன்றி

உற்பத்தி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்கின்ற முகாமையும் இதனாலேயே மேற்கொள்ளப்படும். இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளும் போது அதில் காலம் பற்றிய நிச்சயமற்ற தன்மைகளினால் ஆபத்துக்களையும் எதிர் நோக்கவேண்டி ஏற்படலாம். இதனை தொழில் துணிவு என்பர். அல்லது இம்முயற்சிகளால் புதிய கண்டுபிடிப்புகளோ அல்லது புதிய தொழில் நுட்பங்களோ மேற் கொள்ளப்படலாம்,

 இத்தகைய முயற்சிகளுக்காக இதற்கு கிடைக்கின்ற சன்மானம் சாதாரண இலாபமாகும். எனவே இலாபமானது முயற்சிக்கான அதாவது உற்பத்தி தீர்மானங்கள், உற்பத்தியை மேற் கொள்ளல் ஆபத்துக் களையும் நிட்சயமற்ற தன்மைகளையும் ஏற்றுக்கொள்ளல் என்பன வற்றுக்கான வெகுமதியாகும்.

எனவே இது நிட்சயமாக கிடைக்கின்ற ஒன்றாக முடியாது. ஆனால் கலப்புப் பொருளாதாரங்களைப் பொறுத்தவரையில் முயற்சியாண்மையானது, தனியார் துறையைப் பொறுத்து இலாப நோக்கின் அடிப்படையிலும் அரசதுறையைப் பொறுத்து சமூக நோக்கின் அடிப்படையிலும் கூட்டுறவுச் சபைகள் போன்ற சமூக பொது நிறுவனங்கள் அங்கத்தவர்களின் இலாப நோக்கு அடிப்படையிலும் செயல் படுவதன் காரணமாகவே கலப்புப் பொருளாதாரங்களில் பல்வேறு வடிவங்களை எடுக்கக் கூடியதாக இருக்கின்றது. (தனியார் , அரசு, சமூகப் பொது நிறுவனங்கள் ) இவ்விலாபமானது ஏனைய காரணி வருமானங்களிலிருந்து பின்வரும் வகையில் வேறுபடுகின்றது.

 

 

லாபம் ஏனைய காரணிகளிலிருந்து வேறுபட காரணம்

01. இலாபம் நிச்சயமற்றது.

 02. இலாபம் பெருமளவிற்கு தளம்பலுடைய வருமானமாகும்.

03. ஏனைய உற்பத்திக் காரணிகளுக்கான வருமானங்கள் எப்போதும் நேர்க்கணியமாக இருக்க இலாபம் ஆபத்துக்கள் நிட்சயமற்ற தன்மை காரணமாக எதிர்க்கணியமாக இருக்கும்.

இங்கு உற்பத்தியில் பெறப்படுகின்ற தேறிய வருமானங்கள் யாவும் இலாபமாக கருதப்படுவதில்லை,காரணம், இத்தேறிய வருமானத்திலிருந்து சொந்த உற்பத்திக்காரணிகள் உற்பத்திக்குப் பயன்படுத்தப் பட்டிருப்பின் அவற்றுக்கான செலவுகளைக் கழித்த பின்னர் வருவதே இலாபமாகும்.

 

தொழிற் பிரிப்பு

ஒரு பொருளின் உற்பத்தி தொழிற்பாட்டினை பல தனித்தனி பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு உற்பத்திப் பிரிவிலும் ஒவ்வொரு வகைக்கேற்ற தொழிழாளர்களினை ஈடுபடுத்தலே தொழிற் பிரிப்பாகும்.

எனவே தொழிலாளர்களை சிறப்பு நிலை தொழில்களில் பயன்படுத்துவதனை இதுகுறிக்கின்றது.

தொழிற் பிரிப்பின் வகைகள்

01. தொழிலின் தொழில் பிரிப்பு

அதாவது ஒரு பொருளின் உற்பத்தி செய் முறைகளைப் பல்வேறு கட்டங்களாகப் பிரித்து ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு தொழிலாளியை ஈடுபடுத்துதல் என்பது தொழிலுக்குள்ளேயே நடைபெறுகின்ற தொழிற்பிரிப்பாகும். இதனை தனிப்பட்ட தொழிற்பிரிப்பு என்றும் கூறலாம்.

 

02. பிரதேச ரீதியான தொழில் பிரிப்பு.

 ஒரு நாட்டுக்குள்ளேயுள்ள ஒவ் வொரு பிரதேசமும் அந்நாட்டுக்குள்ளேயே காணப்படும் வழங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யக் கூடிய பொருட்களைத் தெரிந்தெடுத்து உற்பத்தி செய்தல் பிரதேச ரீதியான தொழிற் பிரிப்பாகும்.

 

03. சர்வதேச ரீதியான தொழிற் பிரிப்பு

 உலகிலுள்ள நாடுகள் ஒவ்வொன்றும் ஒப்பிட்டு ரீதியில் தம்மிடம் இயற்கையாகக் காணப்படும் வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யக் கூடிய தொழில்களைத் தெரிவு செய்து அவற்றில் ஈடுபடுதலே சர்வதேச ரீதியான தொழிற்பிரிப்பாகும்.

 

தொழிற்பிரிப்பின் அனுகூலம் /நன்மைகள்

1.நாடு உயர்ந்த உற்பத்தி மட்டத்தை செய்யக்கூடியதாக இருத்தல்

 2. பயிற்சி வினைத்திறன் என்பவற்றைப் பெறுவதன்மூலம் உற்பத்திக் காரணியின் உற்பத்திறன் அதிகரிக்கிறது.

 3. புதிய கண்டுபிடிப்புகளைத் தூண்டும்.

4. உற்பத்தி செய்முறைகளை இயந்திரமயப்படுத்தி உதவுகின்றது.

 5. வெவ்வேறுபட்ட பிரதேசங்களில் காணப்படுகிற மூலவளங்களை பூரணமாக பயன்படுத்துதல்.

6. சர்வதேச வர்த்தகத்தின் அடிப்படையாக அமைந்துள்ளதால் பாரிய சந்தை வாய்ப்பு ஏற்படுகிறது.

7. வெவ்வேறுபட்ட உற்பத்திக் காரணிகளிடம் காணப்படுகின்ற வெவ்வேறு உற்பத்தி ஆற்றலைப் பயன்படுத்தக் கூடியதாக இருத்தல்.

 

தொழிற்பிரிப்பின் பிரதிகூலம்

1.உளரீதியாக தொழிலின் ஒரு சலிப்புத்தன்மை ஏற்படலாம்

 2. சர்வதேச ரீதியாக ஒரு நாடு உலகச்சந்தையில் தங்கியிருக்கலாம்

3. குறுகிய தொழிற்பிரிப்பு சிறக்குமியல்பினால் ஊழியத்தின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

4. ஒவ்வொரு உற்பத்திக் காரணியும் மற்ற உற்பத்திக் காரணிகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

5. ஒரு தொழிலாளியின் வரவின்மையால் உற்பத்தி முழுவதும் தடைப்படக்கூடிய நிலை ஏற்படும்.

 

சிறப்புத் தேர்ச்சி

ஒரு பொருளின் உற்பத்தி செய்முறையினை பல்வேறு பகுதிகளாகப் பிரித்து குறிப்பிட்ட ஒவ்வொரு பிரிவிலும் உற்பத்திக்காரணிகள் சிறப்பான நிலையினை அடைந்து கொள்ளுதல் சிறப்புத் தேர்ச்சியாகும்.

அதாவது பொருளுற்பத்தியின் ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு உற்பத்திக் காரணியும் தொடர்ந்து உற்பத்தியில் ஈடுபடுவதன் மூலம் அவ்வுற்பத்திப் பிரிவில் ஒவ்வொரு உற்பத்திக் காரணியும் பெறுகின்ற சிறந்த நிபுணத்துவமும் சிறந்த ஆற்றலுமே சிறப்புத் தேர்ச்சியாகும்.

 

சிறப்புத் தேர்ச்சியின் வகைகள்

1. உற்பத்திக் காரணியின் சிறப்புத் தேர்ச்சி.

ஒரு பொருளின் உற்பத்தியில் ஒரு பிரிவில் ஒரு உற்பத்தி காரணி தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் அதில் பெற்றுக் கொள்கின்ற சிறந்த நிபுணத்துவம் சிறந்த ஆற்றலுமே உற்பத்திக் காரணியின் சிறப்புத் தேர்ச்சியாகும்.

2. பிரதேச ரீதியான சிறப்புத் தேர்ச்சி.

 குறிப்பிட்ட ஒரு நாட்டுக்குள்ளே ஒவ்வொரு பிரதேசமும் ஒவ்வொரு பொருளின் உற்பத்தியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு அப்பொருளை சிறப்பாக உற்பத்தியாக்குவதற்கு அப்பிரதேசம் பெற்றுக் கொள்ளும் சிறந்த நிபுணத்துவம் ஆற்றலும் பிரதேச ரீதியான சிறப்புத் தேர்ச்சியாகும்.

3. சர்வதேச ரீதியான சிறப்புத் தேர்ச்சி.

உலகில் காணப்படுகின்ற ஒவ்வொரு நாடுகளும் குறிப்பிட்ட ஒரு சில பொருட் களை மட்டும் தெரிந்தெடுத்து அப்பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டு அப்பொருளை சிறப்பாக உற்பத்தி செய்யக் கூடிய சிறந்த நிபுணத்துவத்தையும், ஆற்றலையும் ஒவ்வோரு நாடும் பெற்றுக் கொள்வதே சர்வதேச ரீதியான சிறப்புத் தேர்ச்சியாகும்.

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக